புதன், 31 அக்டோபர், 2018

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது


ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது.

ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம்.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும். தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.

ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை. வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும்.

மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது. குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி செய்கிறது.

வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வோம்.
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

எப்பொழுதும் பொறுமையாகவே இருங்கள்..!!


எப்பொழுதும் பொறுமையாகவே இருங்கள்..!!

பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீனர்கள் மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.

ஆனால், அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும்.

அதுவும் எப்படி? சட சடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டுகாலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும். அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும்போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை!

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது..

மகிழ்வித்து மகிழ்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.


18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்....

🍀
காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.

🍀
செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....

🍀
என்ன ஆயிற்று எனக்கு?

🍀
நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?

🍀
ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....

🍀
நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

🍀
காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது

🍀
என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.

🍀
அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.

🍀
அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......

🍀
என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

🍀
நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.

🍀
ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

🍀
என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

🍀
அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?

🍀
நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?

🍀
என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

🍀
அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.

🍀
ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.

🍀
"ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.

🍀
"கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!

🍀
திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..

🍀
என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

🍀
இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......

🍀
இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.

🍀
ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!

பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

சனி, 11 ஆகஸ்ட், 2018

#நல்லதங்காள் கதை'' தெரியுமா உங்களுக்கு....?


#நல்லதங்காள் கதை'' தெரியுமா உங்களுக்கு....?

அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.

அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.

நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான்.

-----------

மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி.  கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது.

காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.

பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.
தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.

நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.

வேலி நிறைய வெள்ளாடுகள்
பட்டி நிறைய பால்மாடுகள்
மோர் கடைய முக்காலி பொன்னால்
அளக்குற நாழி பொன்னால்
மரக்கால் பொன்னால்.

இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம்.

கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.

----------------

நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.

அழுதுபுரண்டு அழுதாள்...
ஆபரணம் அற்று விழ.
முட்டி அழுதாள்...
முத்து மணி அற்று விழ.

நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.

நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.

--------------

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.

பஞ்சமோ பஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்
மன்னவரைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம்
நாயகரைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து
கணவரைப் பறிகொடுத்து
கைக்குழந்தை விற்ற பஞ்சம்

இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள்.

நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.

நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.

காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.

“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னான்.

காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.

சந்தனம் தொட்ட கையால் - நான்
சாணி தொட காலமோ!
குங்குமம் எடுக்கும் கையால் - நான்
கூலி வேலை செய்ய காலமோ
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.

இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

--------------

நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.

நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.

அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.

அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.

அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

குதிரை அரிதாச்சோ
குடி இருந்த சீமையிலே!
பல்லக்குதான் பஞ்சமோ
பத்தினியே உனக்கு!
கால்நடையாய் வர
காரணம் ஏன் தங்கச்சி?

என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான்.

“சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.

நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.

“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காரி  உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.

--------------------

நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.

நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.

''கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?''

என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.

நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்

என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.

ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள்.

ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.

பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். ''அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க'' என்று கெஞ்சினாள்.

மூளி அலங்காரி, ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள்.  திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். எரிக்க  ஈரமட்டைகளை கொடுத்தாள்.  நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.

எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.

ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.

நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

----------------

பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

''பச்சரிசி குத்தித் தாரோம்
பாலும் கலந்து தாரோம்!
பாலரும் நீயும்
பசியாறிப் போங்க!''

என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.

''அரச வம்சம் நாங்கள்
அண்டை வீட்டில்
தண்ணீர் குடிக்க மாட்டோம்''
என்று சொல்லிவிட்டாள்.

காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம்.

அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்...

“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.

நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள்.

கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள்.

அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள்.

அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.

-------------

ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன.

காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.

மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான்.

''என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே!'' என்று கெஞ்சினான்.

''தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப் பிழைத்து அம்மா - நான்
உனது பேர் சொல்லுவேன்''

என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள்.

இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள்.

நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.

நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.

----------------

நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது.

காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.

நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.

மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள்.

மூளி கூசாமல் பொய் சொன்னாள்.
“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.
சாப்பிட்டுப் போனாங்க’’
என்று பொய் சொன்னாள்.

நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்தது  நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள்.

அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான்.

நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான்.

''அய்யோ........'' தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.

தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான்.

பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள்.

நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான்.

தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.

இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான்.

இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?

வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது.

அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.

நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது.

வெள்ளி, 6 ஜூலை, 2018

வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன


வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .

மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.

மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.

வருடங்கள் கடந்தன.

ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.

மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.

தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.

“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “

இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.

காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.

இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன்.
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான்.

“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.

ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.

இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.

இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.

அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.

*படிக்கும் போதே நெகிழ்ந்து போனேன். பிறருக்காக *பகிர்ந்தேன்* 

ஞாயிறு, 1 ஜூலை, 2018

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!

குட்டிக்கதை:
வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை
கொண்டாடினார்கள்.
ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் ஆண்டு திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்.
இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.
அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? 
அறிவில்லையா?" என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.
அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.
நீதி:
இப்படிதான் பல ஆண்களின் வாழ்க்கை அமைதியாக செல்கிறது
குறிப்பு: சி்ரிக்க கூடாது....

செவ்வாய், 26 ஜூன், 2018

நீதி கதைகள்




தன்வினை தன்னைச் சுடும் | நீதி கதைகள்

குழந்தைகளுக்கான கதைகள், நீதி கதைகள்
ஒரு ஊரில் செல்வந்தர் வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.

அப்பா சொன்னார், நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்? என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார்
நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது அவரும் கூறிவிட்டு தன மகனிடம் கேட்குமாறு கூறினார்
மகனும், நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா! என்றான்
நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க எல்லோரும். வாடிக்கையாளர் சந்தேகம் தீர்க்கும் உதவி தொலைபேசிக்கு அழைத்து காரணம் கேட்டார்கள். அதில் எந்த மாற்றம் இல்லை என கூறிவிட்டனர்
அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான், உங்களை மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். அய்யா என்றான்
என்ன தப்பு இருக்கிறது என்ற மனகுமுரளோடு சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை...!
தன்வினை தன்னைச் சுடும்.

***************************************
காகமும் நாய்க்குட்டியும் | நீதிக் கதைகள்

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.
இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.
என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.
அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.
இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி
எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.
உண்மைதான்! என்றது நாய்க் குட்டி
பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.
ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.
இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?
குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.
ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி
அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.
திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.
நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.


*******************************************************
வெற்றிக்கனி! | தெனாலிராமன் கதை

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.
கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.
“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.
ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.
“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.
கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.
வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

*******************************************************
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் | திருக்குறள் கதை


ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.
குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு - குறள் 423 (எப்பொருள்யார்)
இதன்பொருள்:
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;
அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு= அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.

*******************************************************
உயிரே மூலதனம் | நீதி கதைகள்


குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.
வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.
தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.
நன்றி: குமுதம்

*******************************************************

பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.

அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார் என்றான் பரணி. எந்த சீனுடா? சும்மா கேட்டு வைத்தான் மாதவன். என் கிளாஸ்மேட்பா. புது கார்ல கோயிலுக்கு போனாங்களாம். ரொம்ப ஜாலியா இருந்துச்சுன்னு சீனு சொன்னான். நீயும் ஒரு கார் வாங்குப்பா.

வாங்கலாம். நாளைக்கே வாங்கணும். மகனை இழுத்து அணைத்து சொன்னான் மாதவன். கார் வாங்க நிறைய பணம் வேணும். இன்னும் அஞ்சு வருஷத்தில் சம்பாதிச்சுடுவேன். நீ ஹைஸ்கூல் போகும் போது உன்னை காரில் கொண்டு வந்து விடுவேன். சமத்து புள்ளையா விளையாடிட்டு வாப்பா.
துள்ளிக்குதித்து ஓடினான் பரணி.
நம்ம ரெண்டு பேருமே அந்தக் கூலி. அஞ்சு வருஷத்தில் கார் வாங்கிடுவேன்னு குழந்தைகிட்டே எதுக்கு பொய் சொன்னீங்க? மாதவனின் மனைவி கேட்டாள்
இப்போ அவனக்கு அஞ்சு வயது அஞ்சு வருஷம் போனா நம்ம பொருளாதார நிலைமை புரிய ஆரம்பிச்சுடும். அந்த பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.
நன்றி: இ-விகடன்

*******************************************************

சிறுவனின் தன்னம்பிக்கை

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.
உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.
அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார்.
சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.

*******************************************************
ஒ துன்பத்தை உதறித் தள்ளு


ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.
கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.
தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.
தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.
நன்றி: அரும்புகள்

*******************************************************
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே !

ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனை பிடித்து ஊர் மக்கள் ‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.
நான் ‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான். நான் கடவுளின் தூதுவன் என்றான் கேட்டவர்கள் சிரித்தார்கள்.
‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’ என்று கேட்க ‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’ என்றான் கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.
புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்று. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள். இப்போதும் அவன் சிரித்தான்.
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’
‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’ என் ஊரார்கள் கேட்க
‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?’’
மக்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்கள்.
‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’
‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’ என்றான்
இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? என்று பார்த்தான் அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.
‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’ ன்னு கேட்டான்
‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’
‘‘எது பொய் என்கிறாய்?’’
‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’
‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’
‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’
இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’
நண்பர்களே! நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர். உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’
நன்றி: தென்கச்சி கோ சுவாமிநாதன்

*******************************************************
ஒற்றுமையே பலம்

ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறிவிட்டார்கள். ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை வைத்தார்.
நால்வரையும் ஆளுக்கொரு கொம்புகளை கொண்டு வர சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். தன மூத்த மகனை அழைத்து நான்கு கொம்பிகளையும் ஒன்றாக கட்ட சொன்னார்.
பிறகு ஒவோருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்க சொன்னார். யாராலும் முடியவில்லை.
பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவொன்றாக கொடுத்து உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.
ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறன். நீங்கள் நாலு பெரும் நான்கு கொம்புகளை போலதான். ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாருளும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.
நான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் பலம் புரிந்தது. அன்றிலிருந்து நால்வரும் சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழ தொடங்கினார்கள்.

*******************************************************
சந்தர்ப்பம் - தன்னம்பிக்கை கதை

கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவன், மனிதனிடம் வந்து போகும் சந்தர்ப்பத்தை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான். அதுதான் சந்தர்ப்பம் (opportunity) என்னும் சிலை.அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.
சந்தர்ப்ப சிலையிடம் சில கேள்விகள்
உனக்கு இறக்கை எதற்கு?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக!
முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?
மக்கள் என்னைப்பற்றிப் பிடித்துக் கொளவதற்காக!
ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?
சந்தர்ப்பத்தைப் பயனபடுத்தாதோரிடமிருந்து கணநேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!
பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?.
சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதிருப்பதற்காக!
சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள். இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார். ஒரு முறை சந்தர்ப்பம் நழுவி விட்டால் அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

*******************************************************
எளியவர்கள் ஒற்றுமையின்றி இருப்பது வலியவர்களுக்கு நன்மையாகும்


தவளையும் சுண்டெலியும்
ஒரு காட்டில் தவளையும் சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. தவளை வாழ்ந்து வந்த குளத்தில் கோடைக் காலத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது.எனவே எலி அதற்கு உதவி செய்ய நினைத்தது. அங்குமிங்கும் தேடி ஒரு குளத்தைக் கண்டறிந்தது. குளத்தினருகில் சென்ற போது, குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் சண்டை வந்தது.
எலி தன் இனத்தவரை ஆதரவிற்குக் கூப்பிட்டது. தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயின. வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் இதைக் கண்டன. சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள் , தவளைகள் மீது பாய்ந்து தமக்கு இரையாக்கிக் கொண்டன.
நீதி: எளியவர்கள் ஒற்றுமையின்றி இருப்பது வலியவர்களுக்கு நன்மையாகும்

*******************************************************
கெடுவார், கேடு நினைப்பார்!


ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.
ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.
நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது
ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது
சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது
தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து
ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.
ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .
தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்

*******************************************************
உயிர் காக்கும் தந்திரம்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

*******************************************************
முள்ளம் பன்றியும் ஓநாய்யும் | வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே


தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது.
என்னது? நான் அழகா? ஆமாம்.
நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்
ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி.
உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது.
ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.
இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.
நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

*******************************************************
சிறுமியின் பொறுமையும் நற்பண்பும்

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.
நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.
இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”
மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்.”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது” என்று கட்டளையிட்டார்.
வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.
வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்து கொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் குழந்தைகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.எல்லோரும் எடுத்து சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை எடுத்தாள்.அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.
இப்படியே நான்கு நாட்கள் நிகழ்ந்தது.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது.எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.
தன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி.அந்த ரொட்டியை தன் தாய்க்கு கொடுத்தாள்.ரொட்டியை பிய்த்தாள் தாய் அதில் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்த தங்கக்காசை எடுத்துக்கொண்டு சிறுமி பெரியவரின் வீட்டிற்கு ஓடி வந்தாள்.”ஐயா இது உங்கள் தங்கக்காசு ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள் அந்த சிறுமி.
‘சிறுமியே உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு,மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்!’ என்றார் பெரியவர்.
துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!!!

*******************************************************
மரமும் மனிதனும்


ஒரு மனிதன் காட்டுக்குள் சென்று மரங்களைப் பார்த்து, மரங்களே என் கோடாலிக்கு ஒரு கைப்பிடி கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டான்.
மனிதன் மீது இரக்கங்கொண்ட ஒரு மரம், தான் கொடுப்பதாகச் சொல்லிற்று. அந்த மரத்திலிருந்து ஒரு கைப்பிடியைத் தன் கோடாலிக்குப் போட்டதும் அங்குள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தான்.
வெகு சீக்கிரம் பல மரங்கள் கீழே விழுந்தன.அதைப் பார்த்த ஒரு கிழட்டு மரம், நம்மவன் ஒருவன் அந்த மனிதனுக்குக் கைபிடி கொடுக்காவிட்டால், இத்தனை மரங்களை அவன் வெட்டிருக்க முடியுமா? என்று பிரலாபித்தது.
சமுகத்திற்கு விரோதமாகக் கோடாலிக்காம்பாக நடத்து கொள்ள வேண்டாம்

*******************************************************
முல்லா கதைகள்


நானும் காணாமல் போயிருப்பேன்:
முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள்
வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை
பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா,
‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார். ‘‘உங்கள் கழுதை காணாமல்
போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?’’ என்று கேட்டனர்.
முல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல்
போயிருப்பேன்... நல்லவேளை’’ என்றாராம்.
____________________________________________________________________________
என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்:
ஒரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ‘‘உங்கள்
கழுதையை இரவல் தர முடியுமா?’’ என்று கேட்டார்.முல்லா, ‘‘முடியாததற்கு
வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்’’
என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்
போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத்
தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ‘‘கழுதை அங்கிருந்து
சத்தமிடுகிறதே முல்லா’’ என்றார். உடனே கோபத்துடன், ‘‘என் வார்த்தையை விட
கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை’’
என்றார் முல்லா.
_______________________________________________________________________________
இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை:
முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார்.
‘‘முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?’’ என்று கேட்டார்.
முல்லா, ‘‘முடியாது’’ என்றார்.தெருக்காரர், ‘‘ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?’’ என்றார்.
முல்லா, ‘‘கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது’’ என்றார் முல்லா.
தெருக்காரர், ‘‘கொடியில் மாவை உலரப் போட முடியுமா?’’ என்றார்.
முல்லா, ‘‘இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை’’ என்றார்.

*******************************************************

நண்டு போதனை

அம்மா நண்டு தன் மகனைப் பார்த்து “மகனே ! ஏன் சைடு வாங்கிக்கொண்டு நடக்கிறாய்! ஏன் நேராக நடவேன்” என்றது. மகன் “உண்மைதான் அம்மா, நேராக எப்படி நடப்பது என்று சொல்லிக்கொடுத்தால் நிச்சயம் நான் அவ்வாறே நடந்து காட்டுகிறேன்” என்றது. தாய் நண்டு என்ன தான் முயற்சிச்சாதலும் நேராக நடக்க வரவில்லை. பக்கவாட்டிலேதான் செல்ல முடிந்தது. “சரி, இப்படியே நடந்து தொலை” என்றது.
நீதி : உபதேசத்தைவிட உதாரணம் சக்தி வாய்ந்தது.

அறிவு கதைகள்



அறிவு கதைகள்

பெற்றோர் சொல் கேளீர்

புதுத்தெரு என்றொரு கிராமம், சின்னசாமி ஆடு மேய்ப்பவர், வழக்கமாக ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. சின்னசாமிக்கு புல்லாங்குழல் வாசிப்பது என்றால் அவ்வளவு பிரியம், ஆடுகள் மேயத்தவாறு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தான்.
அந்த புல்வெளியைச்சுற்றி முள்வேலி போடப்பட்டிருற்தது. வேலியின் அருகே ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.
வேலியின் மறுபுறம் ஒரு ஓநாய் ஒன்று வேட்டைக்கு காத்திருந்தது. ஓநாய் ஆட்டுக்குட்டியை பார்த்ததும், எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது
அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, சற்று ஆச்சரியமாக பார்த்தது, ஓநாயை முதல் முறையாக பார்த்ததினால் அதன் நோக்கம் ஆட்டுக்குட்டிக்கு தெரியாமல்   “உனக்கு என்னவேண்டும்?” என்று பாசமாக கேட்டது.
ஓநாயோ “நண்பா, நண்பா… நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க, இங்கே இளம் புல் எங்கே கிடைக்கும் என்று கேட்டது, இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்றது பாவமாக.
“ஓ...! அப்படியா! நீ புல் சாப்பிடுவாயா? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.
“சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.
ஓ அப்படியா “சரி அங்கேயே இருங்கள். நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய் ஜாலியா அதைச் சாப்பிட்டுவிட்டு, நன்பர்களாக சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.
ஓநாயின் திட்டம் தெரியாமலும், ஆடு சிநேகத்துடன் செற்றது, ஓநாயின் பக்கம் சென்றதும் அது சட்டென அதன் காலை பிடித்து கொண்டது.
ஆடு சத்தமாக கத்த தொடங்கியது, சின்னசாமியும், தாய் ஆடும் சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடியது. ஓநாய் அதற்குள் ஆட்டுக்குட்டியின் கழுத்தை பிடிக்கும் நேரத்தில் அவர்கள் ஓநாயை அடித்து விரட்டிவிட்டார்கள்.
அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், இந்த மாதிரி ஆபத்தில் மாட்டி கொள்ளாமல்  இருந்திருக்கலாம், மதிப்பு வாய்ந்த தன் உயிரை காப்பாற்றிய சின்னசாமிக்கும் பெற்றோர்க்கும் நன்றியோடு நடந்து கொண்டது அந்த ஆட்டுக்குட்டி.

*****************************************************
நன்றியுள்ள காக்கை

மேகலாவுக்கும் சரவணனுக்கும் அர்ச்சனா என்ற 2 வயது மகள் இருந்தாள், அரச்சனாவுக்கு வீட்டின் முற்றத்தில் வைத்து சோறு ஓடினார் அவளின் அம்மா
முற்றத்தில் சோறு ஊட்டுவதை மரத்தில் நின்று பார்த்த ஏராளமான காகங்கள் கூடிவிட்டன.
காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் மேகலா. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை.
அப்போது அடுப்பில் விசில்... சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் மேகலா.
அர்ச்சனாவின் தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி தான்.
அம்மா உள்ளே போனதும், அர்ச்சனா கண்ணால் சிரித்தபடி தளிர்நடை நடந்தபடி, சோற்றை அள்ளி காக்காவை நோக்கி நீட்டினாள். காகங்கள் அவளை நெருங்கி வர, “காக்கா இந்த... காக்கா இந்தா...” என்று சோறு போட்டாள்.
உள்ளே சென்ற மேகலா திரும்பி வர, அர்ச்சனாவை திட்டி விட்டு,
“அரிசி விக்கிற விலைக்கு இதுகளுக்கு வேற சோறு போடணுமாக்கும். உன் சாப்பாட்டை காக்காவுக்கு தியானம் பண்றியா?” காக்கைகளை விரட்டினாள்
அர்ச்சனாவுக்கு நாய், பூனை, காக்கா, எறும்பு எல்லோருமே நண்பர்கள்தான். கையில் என்ன பண்டம் வைத்திருந்தாலும் போட்டு விடுவாள். அவளுக்கு என்ன தெரியும்...!?
அதட்டிக் கொண்டே சோறூட்டிய மேகலா , விளையாட்டுச் சாமான்களை அர்சனாவிடம் கொடுத்துவிட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்க வீட்டுற்குள் சென்றுவிட்டாள்.
அர்ச்சனா முற்றத்தில் விளையாட்டு சாமான்களை பரப்பி விளையாடிக் கொண்டிருந்தாள்.
திடீரென அர்ச்சனாவின் கூச்சலும், காக்காக்கள் கத்தும் சத்தமும் கேட்டு வெளியே ஓடி வந்தாள் மேகலா.
அங்கே குரங்கு ஒன்றை காக்கை கூட்டம் விரட்டி விரட்டி கொத்திக் கொண்டு இருந்தது.
“அம்மா என் டப்பா...” என்று அழுத அர்ச்சனா, அம்மாவை கட்டிக் கொண்டாள்.
ஒரு நொடியில் நடந்ததை புரிந்து கொண்டாள் மேகலா.
தன் மகள் விளையாடிய பாத்திரத்தில் ‘சாப்பிட ஏதேனும் இருக்குமோ?’ என எண்ணி குரங்கு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. இதைப் பார்த்த காகங்கள் குரங்கினை விரட்டி கொத்துகின்றன என்பதைப் புரிந்து கொண்டாள்.
மகள் மற்ற ஜீவன்களுடன் நட்பாக இருந்தது, அவளுக்கு ஒரு இடையூறு நேர்ந்தபோது உதவியாக அமைந்ததை எண்ணி ஆச்சிரியப்பட்டாள் மேகலா.
அன்று முதல் மகளுக்கு சோறூட்ட வரும் மேகலா முதலில் காகங்களை ‘க்கா...க்கா...’ எனக் கூப்பிட்டு சாதம் வைத்த பின்னரே மகளுக்கு உணவூட்டினாள்!
நாய் மட்டுமல்ல நாம் பாசம் காட்டும் எல்லா உயிரினங்களும் நன்றியுள்ளவையே.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. "
என்கின்ற குறள் ஞாபகம் வருகிறது
குறள் விளக்கம்: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

*****************************************************

உச்சியை தொட செவிடாய் இரு

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.
ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.

போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்
கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.
மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன
“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது
சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது
அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்
அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”
உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே


*****************************************************

அறிவுத்திறனும், உடல் பலமும்

ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.
ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.
"முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று?" என்று முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்:
"நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன?'' ரங்கன் சொன்னான்: "இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா! நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமே!''
முதலாளி சொன்னார்: "ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்!''


*****************************************************

100 சதவீத அன்பை காட்டுங்கள் |

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.
அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.
இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.
எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!!!

*****************************************************

சோழனின் பெருமை

தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார்.
அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை.
அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள்.
அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தான்.
அவனருகில் போன அரசர், “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.
“நான் இங்கு மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டான் அவன்.
“அப்படியா?” என்ற ராஜராஜசோழன் அங்கிருந்த வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்தார்.
ஒரு வழியாக பாறை மேலே போய்ச் சேர்ந்தது.
பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அவர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அந்த மேற்பார்வையாளனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
மறுநாள் பேரரசரிடமிருந்து அந்த மேற்பார்வையாளருக்கு ஒரு ஓலை வந்தது.
அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பவும். நேற்று வேலை செய்ததைப் போல் அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது.
இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு ஆணவம் ஒழிந்தது.
பின் அவனும் மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களுக்கு ஊக்கமளித்தான்.

*****************************************************

ஆத்திரம் அழிவை தரும்

அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.
மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.
அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.
உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று
கடவுளும் வந்தார்...!
பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.
அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.
தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.
இதுதான் பக்தன் கேட்ட வரம்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.
பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.
இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.
சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.
வருத்தம் வராது.
சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.
பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.
பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.
கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.
சரி.. எனக்கு தெரிந்த வரையில் நீங்க கோவக்காரர் இல்லை… சரிதானே.

*****************************************************

வெற்றிக்கனி! | தெனாலிராமன் கதை

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.
கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.
“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.
ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.
“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.
கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.
வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

*****************************************************

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் | திருக்குறள் கதை

ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.
குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு - குறள் 423 (எப்பொருள்யார்)
இதன்பொருள்:
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;
அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு= அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.

*****************************************************

மாற்று கோணம் நமக்கு முக்கியம்

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

*****************************************************

உயிரே மூலதனம்

குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.
வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.
தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.
நன்றி: குமுதம்


*****************************************************

புலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி? |

ஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக்க நேரிட்டது.
அப்போது எருமையைப் பார்த்த புலி, ""நீ உருவத்தில் பெரிதாக இருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலசாலி போலவும் தெரிகிறது. ஆனால், உன்னை விட உருவத்தில் சிறியவனான மனிதன் உன் முதுகில் முகத்தடியை வைத்து நிலத்தை உழ வைக்கிறான். அப்படி உன்னை ஆட்கொள்கிற அளவிற்கு அவனிடம் என்ன சக்தி இருக்கிறது,'' எனக் கேட்டது புலி.
""எனது எஜமானனிடம் அறிவு இருக்கிறது,'' என்றது எருமை.
""அறிவு என்றால் எத்தகைய அறிவு?'' என்று புலி கேட்டது.
""எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், எனது நண்பர்கள் எல்லா விலங்குகளையும் ஆட்டிப் படைக்கும் அறிவு மனிதனுக்கு இருப்பதாகக் கூறினர்,'' என்றது எருமை.
""அப்படியென்றால் எனக்கும் அந்த அறிவு கிடைக்குமா?''
""அதை எனது எஜமானரிடம் கேட்டால்தான் தெரியும். இதோ அவரே வருகிறார்,'' என்றது எருமை.
அந்த நேரம் பார்த்து அங்கே எருமையின் எஜமானன் வந்து சேர்ந்தான். அவனுக்குப் புலியைக் கண்டதும் நடுக்கம்.
'இனி இங்கிருந்து ஓடினால் புலி நம்மை அடித்துக் கொன்று விடும். அதனால் நடப்பது நடக்கட்டும்' என்று அசட்டுத் துணிச்சலில் ஓடாமல் அங்கேயே நின்று கொண்டான்.
அப்போது புலி விவசாயியிடம் கேட்டது.
""நாங்கள் அறிவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அறிவைப் பற்றிச் சொல்லுங்கள். அது எனக்கு கொஞ்சம் கிடைக்குமா?'' என்றது.
அதைக் கேட்டதும்தான் விவசாயிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"இனி இந்தப் புலி நம்மை ஒன்றும் செய்யாது' என்று நினைத்த அவன், ""அறிவை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை உனக்கு கொஞ்சம் எடுத்து வருகிறேன். அதனால் இங்கிருந்து நீ போய் விடாதே,'' என்று புலியிடம் கேட்டுக் கொண்டான்.
புலியும், "இனி காட்டு விலங்குகள் எல்லாம் நாம் சொன்னபடி நடக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ""நான் எங்கும் போய் விட மாட்டேன். இங்கேதான் இருப்பேன்,'' என்றது.
""நான் போன பிறகு எருமையை நீ அடித்துச் சாப்பிட்டு விடமாட்டாயே?''
""நிச்சயம் சாப்பிட மாட்டேன்!''
""சரி, உன்னைக் கட்டிப் போட்டால் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டாயே?''
""மாட்டேன்!''
புலி அப்படிச் சொன்னதும் அதைப் பிடித்து ஒரு மரத்தில் விவசாயி இறுக்கமாகக் கட்டிப் போட்டான். பிறகு, ""இந்தக் கட்டு களை அவிழ்த்து விட்டு நீ போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல,'' என்றான் விவசாயி.
புலியும், ""சரி!'' என்றது.
""ஒரு நிமிடம்... அறிவு என்னிடமே இருக்கிறது. நான்தான் மறந்து போய் வீட்டி லிருக்கிறது என்று சொல்லிவிட்டேன்,'' என்றான்.
""அப்படியா? உடனே அதை எனக்கும் கொஞ்சம் கொடு,'' என்றது புலி.
""இதோ, என்றவாறே ஒரு தடியை எடுத்து புலியைக் கண்,மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான் விவசாயி. அவ்வளவுதான், புலி வலியால் துடிதுடிக்க ஆரம்பித்தது.
""ஏய்! முட்டாள் விவசாயி... என்னை எதற்கு அடிக்கிறாய்?''
""நீதானே அறிவை கேட்டாய். அதைத்தான் உன்னிடம் காண்பிக்கிறேன். இனி நீ எனது எல்லைப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்தால் அவ்வளவுதான் கொன்றே விடுவேன்,'' என்று சொல்லிவிட்டு விவசாயி அங்கிருந்து சென்று விட்டான்.
புலிக்கோ உடல் முழுக்க சரியான ரத்தக்காயம்... எப்படியோ போராடி கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிவிட்டது.
புலியின் மீது பட்ட அடிதான் நாளடைவில் அதன் கோடுகளாகிப் போனதாம். புலியின் உடலில் கோடுகள் இருப்பதற்கு வியட்நாமிய கிராம மக்கள் இப்படியொரு கதையை கூறுகின்றனர் குட்டீஸ்... புலிக்கு கோடு வந்தது எப்படின்னு தெரிஞ்சுகிட்டீங்களா?
கதை தானே ஜாலியா எடுத்துக்கோங்க!

*****************************************************
அன்னையின் வளர்ப்பு | ஒரு விஞ்ஞானியின் கதை

நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார் ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெய்யிலில் காட்டினார்.

பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார், ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேளையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார்.
இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர் சி வி இராமன் ஆனார்.


*****************************************************

மரங்கொத்திப் பறவை

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.
தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.
கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.


*****************************************************

இது விற்பனைக்கு அல்ல

செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்குச் சென்றான் அந்தச் சிறுவன். பல அழகிய நாய்க்குட்டிகள் அங்கே விற்பனைக்கு இருந்தன. விலை 500 ரூபாய் என்றார் கடைக் காரர். கடையின் ஒரு மூலையில் நாய்க்குட்டி ஒன்று தனியாக இருப்பதைப் பார்த்தான் அவன்.
"இது மட்டும் ஏன் தனியாக இருக்கிறது? இது விற்பனைக்கு இல்லையா?'' என்று கேட்டான் சிறுவன்.
"இது உடற் குறைபாடுள்ள குட்டி. ஒரு கால் இல்லாமலேயே பிறந்தது. ஆகவே இது விற்பனைக்கு இல்லை'' என்றார் கடைக் காரர்.
அந்தக் குட்டியைத் தூக்கி விளையாடிய சிறுவன், தனது பையில் இருந்து 500 ரூபாயை எடுத்து நீட்டினான். "இந்தக் குட்டியை வாங்கிக் கொள்கிறேன்'' என்றான்.
"இது விற்பனைக்கு இல்லை என்று சொன்னேனே! நீ வேறு நல்ல குட்டியை வாங்கிக் கொள்ளலாமே. கால் ஊனமான இந்த நாய்க்குட்டியை ஏன் தேர்ந்தெடுத்தாய்?'' என்றார் கடைக்காரர்.
சிறுவன், தான் அணிந்திருந்த கால் சட்டையின் கீழ்ப் பகுதியைத் தூக்கிக் காட்டினான். அங்கு அவனுக்கு மரத்தாலான ஒரு கால் இருந்தது.
உடற் குறைபாடு உள்ள சிறுவன், தன்னைப் போலவே ஒரு கால் இல்லாமல் இருந்த நாய்க்குட்டியின் உணர்வுகளையும் துயரங்களையும் புரிந்து கொள்ளும் பெரிய மனம் படைத்திருந்தான் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.
மற்றவரது இடத்தில் நம்மை வைத்து, அவர்களது பிரச்னைகளையும் துன்பங்களையும் புரிந்து கொள்ளும் மனமும் திறனும் நமக்கு வேண்டும். ஆங்கிலத்தில் இதை Empathy என்பர்.
நன்றி
இணைய விகடன்


*****************************************************

ஆசிரியர் தின வாழத்துக்கள்


தாயை போல கருணையும்
தவறுகளை திருத்தும் ஆசானும்
ஞானி ஆக்கும் வழிகாட்டியும்
ஏணியாய் இருந்து என்னை ஏற்றியதும்
அறிவு பசியை ஆற்றியதும்
நல்லது கெட்டது அறியும் அறிவு தந்ததும்
புத்தனின் ஞானமும் சித்தனின் அனுபவமும்
சொல்லி கொடுத்த தெய்வமும்
சிறு சிறு தவறுகளை திருத்தியும்
உலக அறிவையும் உணர்த்தியும்
என்னையும் பலரையும் மேலே உயர்த்தியும்
எங்கள் திறமைகளை புரியவைத்தும்
தோழன் போல தோளில் தட்டிக்கொடுத்தும்
முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றும்
பல சேவை செய்த உங்கள் சேவைக்கு
நன்றி சொல்கிறேன் என் பாசமிக்க ஆசிரியரே
உங்கள் ஆசிரியர் பயணம் என்றும்
இனிமையாய் நீண்டு தொடரவும்
நீங்கள் பல்லாண்டுகள் வாழவும்
என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - நெய்வேலி வடக்கு (திரு. சி. சக்கரை,
திரு. எபனேசர் (ஓட்டபிடாரம்), திருமதி/ செல்வி புவனேஸ்வரி (பட்டுக்கோட்டை)
பின்லே மேல்நிலை பள்ளி - மன்னார்குடி (ஆசிரியர்கள் & ஆசிரியைகள்).
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - ஆலங்குடி - (ஆசிரியர்கள் & ஆசிரியைகள்)
ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பட்டுக்கோட்டை (பேராசிரியர்கள் & பேராசிரியைகள்)
எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி - கரூர் - (பேராசிரியர்கள் &
பேராசிரியைகள்)
மற்றும் எனக்கு படிப்புக்கு உதவிய நண்பர்கள் & சில நல்ல விஷயங்களை கற்று கொடுத்த நல்ல நண்பர்கள் (இவர்களும் ஒரு வகையில் ஆசிரியர்களே)


*****************************************************

நள்ளியும் புள்ளியும்


" அக்கா!,
நல்லவன், புத்திசாலி இந்த இரண்டில் நான் எப்படி இருக்க வேண்டும்?"
பேரன் சந்தர் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் பேத்தி புவனாவைப் பார்த்துப் பார்வதிப் பாட்டி சிரித்துக் கொண்டே அன்றைய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவைகளுக்கு நள்ளி, புள்ளி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தது. குட்டிகளும் வளர்ந்து சுயமாக வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி வைத்தது. இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.
நள்ளி இரக்க குணமுடைய அறிவாளி.. மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி, காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது. முதலில் அதனுடைய போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து இழுத்தன.
தினமும் நள்ளி வீட்டின் முன் உபதேசம் நடக்கும். நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற பிராணிகள் பயந்து நடுங்கின. நள்ளி தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டது.. திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. நள்ளியின் பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது.
எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது..
இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் நள்ளியைப் பாராட்டின. ஆனால் புத்திசாலியான புள்ளி அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறியது. ஆனால், நள்ளி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அன்பு கலந்த உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச் சொன்னது. 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.
ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு அகோரப் பசி உண்டான போது நள்ளியின் நினைவு வந்தது. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் நள்ளி வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது நள்ளி நன்றாக துங்கிக் கொண்டிருந்தது.
பாவம் நள்ளி, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது..
நள்ளியின் அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும் பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் புள்ளி நள்ளி வீட்டிற்கு வந்து அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல் சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.
நள்ளியைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. புள்ளியையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் புள்ளி கவனித்தது. கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப் பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான புள்ளி அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி கண்டுபிடித்தது.
மறு நாள் இரவு புள்ளி கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில் கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது..
எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் புள்ளி வீட்டுக்கு வந்தது. கதவு திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. புள்ளியைக் கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு அதன் கண்ணில் படவில்லை. கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது.. அன்றிலிருந்து ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் புள்ளி வாழ்ந்தது.
நள்ளியின் அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை. ஆனால், புள்ளிக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால் புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும் திருத்தி வாழ வைக்க முடியும்.
கதையை கவனமாக கேட்ட சந்தர் புத்திசாலியாக இருப்பதோடு நல்லவனாகவும் இருக்கப் போவதாகச் சொன்னான். புவனாவும் அதை ஆமோதிக், பாட்டி அவர்களை அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்பு ஸ்பரிசம் அனைவரையும் விரைவில் ஆனந்தமாகத் தூங்க வைத்தது.
நன்றி: மாத்தியோசி

*****************************************************

மனதைப் புரிந்து கொள் | மகிழ்ச்சியாக வாழ்

ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.

“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.
“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்
“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர்
“அப்படியா சொல்கிறீர்கள்?“
“ஆமாம்!”
“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”
“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”
“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.
"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -
“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.
மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,
இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.
எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.
தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” -
endru அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.
துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.
“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”
நன்றி : உள்ளமே உலகம் - தென்கச்சி கோ.சுவாமிநாதன்


*****************************************************

பிஞ்சு மூளையில் உதித்த அறிவு | அறிவின் அறியாமை

ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார்.
சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் “யானை!”, “யானை!” என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது.
ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, “ஐயா, அது யானை அல்ல… யானையின் படம் என்றது”. ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் உதித்த அறிவு தமது அறியாமையை ஆசிரியருக்கு உணர்த்தியது.
“படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது! இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது”.
ஆகையால் நாம் இந்த துன்பத்திற்கு ஆளாகாமல் அகங்காரம் இன்றி வாழ்ந்திடுவோம்!


*****************************************************

யானைக்கு வந்த திருமண ஆசை

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.
தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.
அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார்.
ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.
நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.
செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.
முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார்.
"என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது.
மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார்.
என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.
மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.
மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.
வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.
மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார்.
முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள்.
நன்றி: தமிழ் அறிவுக் கதைகள்.