வெள்ளி, 6 ஜூலை, 2018

வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன


வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .

மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.

மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.

வருடங்கள் கடந்தன.

ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.

மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.

தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.

“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “

இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.

காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.

இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன்.
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான்.

“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.

ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.

இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.

இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.

அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.

*படிக்கும் போதே நெகிழ்ந்து போனேன். பிறருக்காக *பகிர்ந்தேன்* 

ஞாயிறு, 1 ஜூலை, 2018

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!

குட்டிக்கதை:
வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை
கொண்டாடினார்கள்.
ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் ஆண்டு திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்.
இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.
அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? 
அறிவில்லையா?" என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.
அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.
நீதி:
இப்படிதான் பல ஆண்களின் வாழ்க்கை அமைதியாக செல்கிறது
குறிப்பு: சி்ரிக்க கூடாது....